×

கடைசி முறையாக செப்.15ம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநர் மிஸ்ரா பதவிக்காலம் நீட்டிப்பு: வேறு தகுதியான அதிகாரியே கிடையாதா?; ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் மனுவை ஏற்று நாட்டின் நலனை கருதி அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை பதவி நீட்டிப்பு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை விட்டால் வேறு தகுதியான அதிகாரி அமலாக்கத்துறையில் இல்லையா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது இதுவே கடைசி முறை என்று கூறினார். அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு 3 முறை அவருக்கு ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ராவின் சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். 1984ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான அவர் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை தலைமை கமிஷனராக இருந்தார்.

அவர் 2018 நவம்பர் 19ம் தேதி அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த பதவி 2 ஆண்டுகள் வகிக்கக்கூடியது. அவர் 2020ம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ஒன்றிய அரசு 3வது முறையாக வரும் நவம்பர் 18ம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி கவாய், நீதிபதி விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 11ல் அளித்த தீர்ப்பில்,’ அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவுக்கு 3வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம். ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் அவர் பணியில் நீடிக்க கூடாது’ என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த உத்தரவை மாற்றக்கோரியும், அக்டோபர் 15ம் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்க கோரியும் நேற்று ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று நீதிபதிகள் பி ஆர் கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள்,’ எதற்காக ஒரு நபருக்காக மீண்டும் மீண்டும் பதவிநீட்டிப்பு தொடர்பாக வருகிறீர்கள்? மலாக்கத்துறையில் வேறு அதிகாரிகள் இல்லையா? இது மற்ற அதிகாரிகள் யாரும் திறமையானவர்கள் இல்லை என்ற பிம்பத்தை உருவாக்காதா?. அந்த துறை முழுவதும் திறமையற்றவர்களா இருக்கிறார்கள்?’ என்று சரமாரி கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில்,’ வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கக்கூடிய, பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதை கண்காணிக்கக்கூடிய அமைப்பானது இந்தியாவிற்கு வருகிறது. இந்த கூட்டம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அப்போது அமலாக்கத்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கருத்து பரிமாற்றங்கள் முக்கியமானது. அதன் காரணமாகவே பதவி நீட்டிப்பை கேட்கிறோம்’ என்று தெரிவித்தார்.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறுகையில், ‘சில அண்டை நாடுகள் இந்தியாவை ‘கிரே லிஸ்ட்’க்குள் வர வேண்டும் என்று விரும்புகின்றன. எனவே அமலாக்கத்துறை தலைவர் பதவியில் நீடிப்பது அவசியம். எனவே இந்த விவகாரத்தில் தேசத்தின் நலன் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்று வாதத்தை முன்வைத்தார். இந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, ‘செப்டம்பர் 15ம் தேதி வரை எஸ்.கே.மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கலாம். செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் பதவிக்காலம் நீட்டிக்கப்படாது. இது தொடர்பாக யாரேனும் வழக்குகள் தொடுத்தாலும், அதனை விசாரணைக்கு ஏற்கமாட்டோம். சாதாரண நிலையில் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டோம்.

ஆனால் பொது நலன் மற்றும் தேச நலனுக்காக இந்த பதவி நீட்டிப்பு உத்தரவை வழங்குகிறோம். செப்.15 நள்ளிரவில் இருந்து அவர் பணியில் நீடிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்’ என்று கூறி உத்தரவிட்டனர். ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘செப்டம்பர் 30 வரை மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று நீதிபதிகளிடம் வலியுறுத்தினார். அதற்கு நீதிபதிகள்,’இல்லை. இதுவும் (செப்டம்பர் 15 வரையிலா பணி நீட்டிப்பு) தேச நலனைக் கருத்தில் கொண்டு வழங்கினோம். சாதாரண சூழ்நிலையில், உங்கள் விண்ணப்பத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆனால் நீங்கள் தேசிய நலனை முன்னிறுத்துகிறீர்கள். இதற்குப் பிறகு எந்த கேள்வியும் இல்லை. அவர் செப்டம்பர் 15 நள்ளிரவிற்கு பிறகு அவர் பதவியில் ஒருபோதும் நீடிக்க முடியாது’ என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

* தலைமை நீதிபதிக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் உச்ச நீதிமன்றம் செயல் இழந்து விடுமா?
சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு எதிர்த்து வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘ உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 11 தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோருவது வருந்தத்தக்கது. இதைப்பார்க்கும் போது முழு நாடும் ஒரு நபரின் தோள்களுக்குப் பின்னால் நிற்கிறது என்று தோன்றுகிறது. மிகப்பெரிய தோள்கள் இந்த நபரின் பின்னால் நிற்கின்றன’ என்றார். இதை துஷார் மேத்தா எதிர்த்தார். அவர் கூறும்போது,’ முக்கியமான சட்ட நடவடிக்கைகளின் போது இதுபோன்ற வாதங்களை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது’ என்றார். அதற்கு,’ சர்வதேச குழு மறுஆய்வு ஒரு தொடர்ச்சியான செயல்முறை. அதற்காக ஒருவர் பணியில் இருந்து சென்றால், முழு பணியும் நின்றுவிடுமா?’ என்று சிங்வி கேட்டார்.

அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷனும், ‘ வெளிநாட்டு குழுவின் மறுஆய்வுக்கான முக்கிய நிறுவனம் அமலாக்கத்துறை என்பது போல் அவர்கள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். அவர் மிகவும் முக்கியமானவராக இருந்தால், அரசு அவரை ஆலோசகராக நியமிக்கலாம். அடுத்த ஆண்டு வரை மறுஆய்வு நடக்கும் என்று அவர்கள் கூறும்போது, ​​அக்டோபர் 15 வரை மட்டும் அவர் ஏன் தேவை?’ என்று பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பினார். அதற்கு துஷார் மேத்தா,’நவம்பர் 3ம் தேதி வெளிநாட்டு குழு வந்தாலும், அதற்கு முன்பே தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இருப்பினும் மிஸ்ரா பணியில் நீடிப்பது தான் இங்கு முக்கியம். இது நாட்டிற்கு உதவும். மேலும் வெளிநாட்டு குழு வழங்கும் மதிப்பீடு பொருளாதாரத்திற்கு அவசியம். ஏனெனில் கடன் மதிப்பீடுகள் உட்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன என்று அவர் கூறினார். அப்போது ​​நீதிபதி கவாய் குறுக்கிட்டு,’ ஒருவேளை நான் இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியில் இருந்தால், அப்போது எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், உச்ச நீதிமன்றமே செயல் இழந்து விடுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

2018 நவம்பர் 19: அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ராவை ஒன்றிய அரசு நியமித்தது.
2020 நவம்பர் 13: சஞ்சய் மிஸ்ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக மாற்றப்பட்டது.
2020 டிசம்பர் 2: 3 ஆண்டுகளாக மாற்றிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
2021 நவம்பர் 14: சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
2021 நவம்பர் 2: ஒன்றிய அரசின் அவசரச் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
2022 நவம்பர் 17: அமலாக்கத்துறை இயக்குநராக மிஸ்ராவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.
2023 ஜூலை 11: அமலாக்க இயக்குநரகத்தின் தலைவராக மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து, அவரது பதவிக்காலம் ஜூலை 31 வரை குறைக்கப்பட்டது.
2023 ஜூலை 26: அக்டோபர் 15ம் தேதி வரை மிஸ்ரா பதவியை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனுத்தாக்கல் செய்தது.
2023 ஜூலை 27: செப்டம்பர் 15 வரை சஞ்சய்குமார் மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

The post கடைசி முறையாக செப்.15ம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநர் மிஸ்ரா பதவிக்காலம் நீட்டிப்பு: வேறு தகுதியான அதிகாரியே கிடையாதா?; ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Director of Enforcement ,Misra ,Supreme Court ,the Union ,New Delhi ,Union Government ,Government of Enforcement ,Sanjay Kumar Misra ,Mishra ,Enforcement ,Supreme Court of the State of the Union ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...